பசி

5 06 2015

பசி

என்னை என் ஏளனமாய் பார்க்கிறாயடா?

காலையும், மாலையும், மத்தியில்

பத்து பதினோறு தடவையும் உன்னால்

என்னை நினைக்காமலிருக்க முடியுமாடா?

முட்டாளே..!

என் நினைப்பு வந்து விட்டால்

உன் கனப்பு கூட விட்டுப்போகுமடா சமயத்தில்..

என்னை என் ஏளனமாய் பார்க்கிறாயடா?

போன புதன் கிழமை மூணே முக்கால் மணிக்கு

மண்டையைப் பிழக்கும் உச்சி வெயிலில்,

மஹாலக்‌ஷ்மி அபார்ட்மெண்டிற்கும் பாக்யலக்‌ஷ்மி அபார்ட்மெண்டிற்கும்,

இடையே உள்ள சகதி சந்திற்குள்

மூக்கை இறுக்கிப் பிடித்து மூத்திர வாடையை மறைத்து

முன்னூறு அடி முன்னாலே நகர்ந்து

உன்னைப் போலவர்கள் அடித்து துரத்தி ஆதரவின்றி

திக்குத் திசையில்லாமல் திரிந்து கொண்டிருக்கும் அந்த

நொண்டித் தெரு நாய் பாதி தின்றும் பாதி தின்னாமலும்

விட்டுச் சென்ற நாலு திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி

பொட்டலங்களைப் பக்கத்தில் யாரும் பார்க்கிறார்களா என்று,

பதினோறு மணி நேரமாய் என்னையே நினைத்துக் கொண்டிருந்ததால்

கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்,

பொத பொத வென்று முழுங்கினாயே எந்த வித கனப்புமின்றி

ஞாபகமிருக்கிறதாடா மடையா?

இன்னும் ஏன் என்னை ஏளனமாய் பார்க்கிறாயடா எளவு கெட்டவனே?

நீ உயிரோடு இருக்கும் வரை,

என் நினைப்பு உன்னை விட்டுப் போகாதடா..

இந்த வறுமை உன்னைத் துறத்தும் வரை,

என் நினைப்பே உன்னைக் கொன்றுவிடுமடா!

போடா போ!

இன்பப் பெருந்தேடல்

13 01 2015

பொங்கல் வாழ்த்து

அரி, மறி, தரி, பறி
கெலி, சுளி, மெலி, முளி
பெரிஞ்சேற்றுத் தீங்கான் காணத் தகாவிவ் வையம் நமக்கு
அருஞ்சோற்று அல்லல் இன்னுமுண்டாம் பெருங்குடியமர்க்கு.

அகல், ஆகல், நகல், நோகல்
எழில், ஏழில், நினல், நோனல்
செறுநாற்றுக் கூட்டமாய் விழைந்துச் செம்மணல் வீங்கி
நறுங்காற்றுப் புறமட்டு மல்லாமெங்கும் தங்கிப் பெருகுமே!

இன்னல், அன்னலுறித்து, இன்பப் பெருந்தேடலை
இப்பொங்கல் நன்னாளில் உற்றேத் தொடங்குக!

காலைப் பனி

10 10 2013

காலைப் பனியின் அணைப்பு

சாலை எங்கும் விரிப்பு

ரசிக்கிறேன்….சுகிக்கிறேன்!!

இங்கும் அங்கும் வியப்பு

எங்கோ எங்கோ நினைப்பு

சிரிக்கிறேன்….விழிக்கிறேன்!!

பெற்றயின்பம்

22 03 2013

உற்றி உறவாடி உக்கிரமாய் ஊரெல்லாம் உழன்று,

மற்றதெல்லாம் மறந்து மயங்கியுன்னை முகர்ந்துகூட

நேற்று நடந்ததெல்லாம் நெற்றிப்பொட்டில் நிற்குமெனில்

பற்றற்றப் பற்றுபோல் பெற்றயின்பம் பெரிதாகா.

வினை

19 10 2010

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாமென்றெண்ணி

மாற்றான் தோட்டத்திலிருந்து கொள்ளையடிக்கத் துணிந்தேன்..

எண்ணித் துனிக கருமம் என்பதால்

பல முறை எண்ணித்தான் துனிந்தேன் ‘சுடப் போகும்’ தண்ணியை விற்றிட..

களவும் கற்று மறக்கலாமென்ற ஒரே காரணத்தால்

மள மளவென்று தோண்டினேன் வறண்ட நிலத்தினை!

வினை விதைத்தது நானேயென்பதால் புது கிணத்துக்கு கிடைத்த நன்றியே நான் அறுத்த

வினையாக எண்ணி மாற்றானின் வீட்டிலிருந்து விடை பெற்றேன் முறைப்போடு!

மலரின் பாடல்

28 10 2009

பாதை விட்டுத் தடம் மாறிய பாவையே நில்!

பாலைவனத்தையும் மாற்றிய பார்வை உனது.

போதை தருமென்றாலும் மேதைமையும் தருமே அது;

பேதை யாரென்றாலும் பிழை செய்யத் தூண்டுமது.

 

கண்களை காட்டிக் காதல் செய்யச் சொன்னாயே,

மண்ணுக்கு மேலாக மிதக்கும் உன் இதயத்தையா?

வண்டுக்களையே ஊர்தியாக்கி இதழ்களை தொட நினைப்பாயே,

மீண்டும் வருமா என் மகரந்தப்பாவையென காத்திருக்கும் ஒரு மலரின் பாடலிது!