பசி

5 06 2015

பசி

என்னை என் ஏளனமாய் பார்க்கிறாயடா?

காலையும், மாலையும், மத்தியில்

பத்து பதினோறு தடவையும் உன்னால்

என்னை நினைக்காமலிருக்க முடியுமாடா?

முட்டாளே..!

என் நினைப்பு வந்து விட்டால்

உன் கனப்பு கூட விட்டுப்போகுமடா சமயத்தில்..

என்னை என் ஏளனமாய் பார்க்கிறாயடா?

போன புதன் கிழமை மூணே முக்கால் மணிக்கு

மண்டையைப் பிழக்கும் உச்சி வெயிலில்,

மஹாலக்‌ஷ்மி அபார்ட்மெண்டிற்கும் பாக்யலக்‌ஷ்மி அபார்ட்மெண்டிற்கும்,

இடையே உள்ள சகதி சந்திற்குள்

மூக்கை இறுக்கிப் பிடித்து மூத்திர வாடையை மறைத்து

முன்னூறு அடி முன்னாலே நகர்ந்து

உன்னைப் போலவர்கள் அடித்து துரத்தி ஆதரவின்றி

திக்குத் திசையில்லாமல் திரிந்து கொண்டிருக்கும் அந்த

நொண்டித் தெரு நாய் பாதி தின்றும் பாதி தின்னாமலும்

விட்டுச் சென்ற நாலு திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி

பொட்டலங்களைப் பக்கத்தில் யாரும் பார்க்கிறார்களா என்று,

பதினோறு மணி நேரமாய் என்னையே நினைத்துக் கொண்டிருந்ததால்

கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்,

பொத பொத வென்று முழுங்கினாயே எந்த வித கனப்புமின்றி

ஞாபகமிருக்கிறதாடா மடையா?

இன்னும் ஏன் என்னை ஏளனமாய் பார்க்கிறாயடா எளவு கெட்டவனே?

நீ உயிரோடு இருக்கும் வரை,

என் நினைப்பு உன்னை விட்டுப் போகாதடா..

இந்த வறுமை உன்னைத் துறத்தும் வரை,

என் நினைப்பே உன்னைக் கொன்றுவிடுமடா!

போடா போ!


செயற்பாடுகள்

Information

பின்னூட்டமொன்றை இடுக